
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 64வது தேசிய பள்ளிகள் விளையாட்டுக் கூட்டமைப்புப் போட்டிகளில், பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, 16ஆம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு ஆட்சியர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 23 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.35.50 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார்.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி, ராஜா என்ற ராஜாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசும் போது, “பள்ளி கல்வித்துறையுடன், விளையாட்டுத் துறையை மேம்படுத்த தமிழக அரசு, விளையாட்டு வீரர்களுக்குப் பொதுத்துறைகளில், 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. அனைத்துப் பஞ்சாயத்து, பேரூராட்சிகளிலும் விளையாட்டுத் திடல்கள் அமைத்து, அங்குள்ள மாணவ, மாணவியர், இளைஞர்களை ஊக்கப்படுத்த ரூபாய் 64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2018-19ஆம் ஆண்டின், 64வது தேசிய பள்ளிகள் விளையாட்டுக் கூட்டமைப்பு சார்பில் இன்று 23 மாணவ, மாணவியருக்கு ரூ.35.50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையை மேம்படுத்த, 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் தத்தெடுத்து, அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையை மேலும் மேம்படுத்த 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு விரைவில் ஆய்வு செய்து, அரசுக்கு வழங்கும் பரிந்துரையின் கீழ், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படும்.
சுமார், 2,400 அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என்று பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இப்பள்ளிகள், பல ஆண்டுகளுக்கு முன், ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டவையாகும். அப்பள்ளிகளிலும், படிப்படியாகக் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆனால், புதிதாகக் கட்டப்படும் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. கரோனா பிரச்சனை காரணமாக நடப்பாண்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தனியார்ப் பள்ளிகள் விரும்பினால், ஆன்லைன் மூலம் அரையாண்டுத் தேர்வினை நடத்திக் கொள்ளலாம். கரோனா பிரச்சனைகள் காரணமாக, 9ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதால், அந்த வகுப்பிற்கு மட்டும் 35 சதவீதப் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. முதல்வரை கலந்து ஆலோசித்த பின் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும். இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.