Skip to main content

தமிழக மீனவர்கள் 21 பேருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு! 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
21 fishermen of Tamil Nadu have been sentenced to judicial custody

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (16.03.2024) காலை 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே இன்று (17.03.2024) மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதே சமயம் மீனவர்கள் 21 பேரை சிறைப் பிடித்து ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 21 பேரையும் மார்ச் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டதுடன் இவர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்கள் நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10/03/2024 அன்று 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்