2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான திமுகவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தற்பொழுது நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில் அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பணிகளை தற்போதே திமுக துவங்கியுள்ளது.
தேர்தலுக்காக திமுக ஒருங்கிணைப்புக் குழுவை நேற்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஐந்து பேர்கள் கொண்ட இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.
கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்தும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இந்த ஆலோசனைகளை குழு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று இக்குழு ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. கட்சியில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து அக்குழு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.