200 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை நோய்த் தாக்கத்திற்கு முன்பும் நோய் தாக்கத்திற்கு பின்பும் மருந்து அளிக்க சித்த மருத்துவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவின் சார்பில் தடுப்பு சிகிச்சை மையம் 200 படுக்கைகளுடன் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரும் நேரில் சென்று ஆய்வு செய்து சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து சித்த மருத்துவப் பிரிவின் மூத்த மருத்துவர் காமராஜ் கூறுகையில், ''தமிழகத்தில் முதன்முதலாக சித்த மருத்துவத்தை கொண்டு கரோனாவை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் மருத்துவர்கள் தொடர்ந்து இங்கு பணியாற்ற உள்ள்ளனர். நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ள வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில மருத்துவத்தை நம்பாத நோயாளிகள் சித்த மருத்துவத்திற்கு தாராளமாக வரலாம். நிச்சயம் குணமடைய செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு'' என்றார்.
மேலும், சிகிச்சைபெற வரக்கூடிய நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உடற்பயிற்சி, யோகா மற்றும் பாரம்பரியமான விளையாட்டு பயிற்சி முறைகள் அனைத்தும் கற்றுத் தர இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.