காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய நிலையில், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலிண்டர் குடோன் ஒன்று இயங்கி வந்தது. இங்கிருந்து சிலிண்டர்கள் கிராம பகுதிகளுக்கும், நகர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. திடீரென நேற்று மாலை அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் எட்டு பேர் நூறு சதவிகித தீக்காயம் அடைந்தனர். மொத்தம் 20 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சென்று உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.
சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை நேற்று இரவு அமைச்சர் தா.மோ.அன்பரசன் சந்தித்து நலம் விசாரித்தார். இன்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இருந்த அந்த குடோனில் கேஸ் சிலிண்டர்களை வைக்க மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பெரிய கேஸ் டேங்கர்களை வைத்து சிலிண்டர்களில் கேஸ் நிரப்பும் பணியும் நடைபெற்று வந்தது தெரியவந்துள்ளது. அப்படி கேஸ் நிரப்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் இந்த வெடி விபத்து தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், அவரது மனைவி சாந்தி, உரிமையாளர் ஜீவானந்தம் உட்பட 5 பேர் மீது அலட்சியமாக செயல்பட்டது, உயிருக்கு பாதுகாப்பு விளைவிக்கும் வகையில் செயல்பட்டது என மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், அவரது மனைவி சாந்தி கைது ஆகியோரை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.