விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நாவல் மருதூர் காலனி பகுதியில் வசித்து வந்த மக்கள் கடந்த 27 ஆம் தேதி குடிநீர் கழிவுநீர் கலந்து வந்தது தெரியாமல் அதனை குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் குடித்த ஆறு குழந்தைகள் எட்டு பெண்கள் உட்பட சுமார் 20 பேர் உடலை நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுப்பையா என்பவரின் மனைவி சியாமளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே பதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் முறையான சிகிச்சையளிக்கவில்லை என கூறி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததைக் கண்டறிந்து உரிய நேரத்தில் அதை சரி செய்திருந்தால் இப்படி பலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று கூறிப் போராட்டத்தை தொடர்ந்தனர். இதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சுரேஷ் போராட்டக்காரர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, குடிநீரில் கழிவு நீர் கலப்பதைக் கண்காணித்து தடுக்காததால், ஊராட்சி செயலாளர் வாசுதேவன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரைத் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.