கீரமங்கலத்தில் 24 ந் தேதி 5 ஆயிரம் பேரை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் செய்ய 3 ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.
டிசம்பர் 24 ந் தேதி கீரமங்கலத்தில் 5 ஆயிரம் பேரை திரட்டி பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் ராமையன், ஸ்ரீதர், துரைசந்திரன், உடையப்பன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கலந்து கொண்டு பேசினார். மேலும் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு அரசே வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். கல்விக்கடன், விவசாய கடன், மைக்ரோ பைனான்ஸ் கடன் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும். மேலும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அதே பொல தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகள், ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கி பயிர்களை காக்க வேண்டும். 5 மாதங்களுக்கு மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளில் மீட்டர் கட்டணத்தை ரத்து செய்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 24 ந் தேதி கீரமங்கலத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன் அந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.