சென்னையில் பாக்கெட் பாலை குடித்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (28). இவர், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (26), தம்பதியின் 2 வயது குழந்தை கனிஷ்கா. நேற்று முன்தினம் சித்ரா தனது குழந்தைக்கு ஒரு பாக்கெட் பாலை கொடுத்துள்ளார். பாலை குடித்த சிறிது நேரத்தில் குழந்தை கனிஷ்கா தூங்கியது. அடுத்த சில நொடிகளில் குழந்தை திடீரென அலறியபடி மயங்கியது. இதனால், அதிர்ச்சி அடைந்த சித்ரா தனது கணவர் கிஷோருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சித்ரா குழந்தையை தூக்கிக்கொண்டு புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் இதய துடிப்பு குறைவாக உள்ளது. உடனே குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றனர். அதன்படி சித்ரா தனது குழந்தையை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த சித்ரா தனது குழந்தையை கட்டிப்பிடித்து அழுதார்.
இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் சித்ரா புகார் அளித்தார். அதில், ‘குழந்தை பாக்கெட் பாலை மட்டுமே அருந்தியது, வேறு எதையும் அருந்தவில்லை. எனவே குழந்தை இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது’ என கூறியிருந்தார். அதன்படி வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பால் குடித்ததால் புரை ஏறி குழந்தை இறந்ததா அல்லது குழந்தை குடித்தது கலப்பட பாலா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தைக்கு அளித்த பால் பாக்கெட்டின் கவரை வாங்கி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.