திருச்சியில் பொங்கல் விழாவையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை கால விடுமுறையையொட்டி வெளியூரில் பணி மற்றும் கல்வி உள்ளிட்டவற்றுக்காகத் தங்கியிருப்போர் சொந்த ஊர் வந்து செல்லும்போது ஏற்படும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு திருச்சியில் ஆண்டுதோறும் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் செயல்பாட்டுக்கு வருவது வழக்கம்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகை போகியுடன் ஞாயிற்றுக்கிழமை முதல் கொண்டாடப்படவுள்ள நிலையில், தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மார்க்கம் செல்லும் பேருந்துகளுக்கு மன்னார்புரம் கல்லுக்குழி சாலையிலும், மதுரை மார்க்கம் செல்லும் பேருந்துகளுக்கு மன்னார்புரம் சர்வீஸ் சாலையிலும், தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளுக்கு மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள சோனா மீனா திரையரங்கம் அருகிலுள்ள வில்லியம்ஸ் சாலையிலும் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வில்லியம்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிகப் பேருந்து நிலையத்தை மாநகரக் காவல் ஆணையர் என். காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பண்டிகை கால கூட்ட நெரிசலின் போது வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக சாலைகளிலும், சாலையோரங்களிலும் கடைகள் அமைப்பது, வியாபாரங்கள் செய்வோர் மீதும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் தெரிவித்தார். நிகழ்வின்போது துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், போக்குவரத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். இப்பேருந்து நிலையங்கள் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் செயல்படும்.