சேலம் அருகே, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இருவர், திருமண உறவுக்கு வெளியே நெருக்கமான தொடர்பில் இருந்த விவகாரத்தால் இருவரும் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திலீப்குமார் என்பவர் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி, மற்றொரு அரசுப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தேவூர் அரசுப்பள்ளியில் பெண் தமிழாசிரியர் ஒருவர் பணியில் சேர்ந்தார். இவர், திலீப்குமாரின் வீட்டு மேல் மாடியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். திலீப்குமாரின் மகன், மகள்கள் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் குழந்தைகளைப் பார்ப்பதற்காக திலீப்குமாரின் மனைவி வார இறுதியில் சென்று விடுவார்.
மனைவி ஊரில் இல்லாத நேரத்தில் திலீப்குமாரும், அவர் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த பெண் ஆசிரியரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்த நெருக்கத்தால், அந்தப் பெண் ஆசிரியர் கர்ப்பமடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்தது.
அக்கம்பக்கத்திலும், பணியாற்றும் பள்ளியிலும் பெண் ஆசிரியர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததால், அவர் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி திலீப்குமாரை வற்புறுத்தினார். ஆனால் அவரோ திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.
இவர்களின் தவறான தொடர்பு குறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்திக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி இடைப்பாடி மாவட்டக் கல்வி அலுவலர் விஜயாவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அவர், முழுமையான அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கை, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே தவறான தொடர்பு வைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து திலீப்குமார் மற்றும் பெண் தமிழாசிரியர் ஆகிய இருவரையும் நிரந்தர பணிநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.