கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே அமைந்துள்ளது எஸ். சந்திரபுரம். இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் அருண்கார்த்திக். 26 வயதான இவர் தனது படிப்பை முடித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.இந்நிலையில், அருணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகிய இரண்டு பேர் நண்பர்களாக இருந்தனர்
மேலும், இவர்கள் மூவரும் சேர்ந்து தனியாக தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களுக்குள் காலப்போக்கில் சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அருணுக்கும் சூரியபிரகாஷிற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இத்தகைய சுழலில், கடந்த 10 ஆம் தேதியன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற அருண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அருண்கார்த்திக்கை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, உடனடியாக பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோர் தன்னுடைய மகனை காணவில்லை என புகார் அளித்தனர்.
அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் காணாமல் போன அருண்கார்த்திக் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், அருணின் நண்பர்களான சூரியபிரகாஷ் அரவிந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அருண் காணாமல் போனதற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர்களை அனுப்பிவிட்டனர். இத்தகைய சூழலில், செல்போன் சிக்னல் தொடர்ந்து ஒரே இடத்தை காண்பித்து வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சூரியபிரகாஷ் அரவிந்த் ஆகியோரை மீண்டும் அழைத்து போலீஸ் பணியில் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, போலீசாரிடம் அவர்கள் சொன்ன தகவல்கள் முன்னுக்கும் பின் முரணாக இருந்துள்ளது. ஒருகட்டத்தில், இதுக்குமேல் தாக்கு பிடிக்க முடியாத இருவரும், போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளனர்.
கடந்த 10 ஆம் தேதியன்று அருண்கார்த்திகை செல்போனில் தொடர்புகொண்ட சூரியபிரகாஷ், அவரை மது அருந்த அழைத்துள்ளார். அப்போது, அருண், சூரியபிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகிய மூவரும் சேர்ந்து எஸ். சந்திரபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு அருகில் மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நேரத்தில், இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தலைக்கேறிய போதையில் இருந்த சூரியபிரகாஷும் அரவிந்தும் சேர்ந்துகொண்டு அருண் கார்த்திகை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், இதில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சூரியபிரகாஷும் அரவிந்தும் சேர்ந்து அருணின் உடலை அங்கேயே புதைத்துவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு, இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட சூரியபிரகாஷ் அரவிந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, பண தகராறில் நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.