வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், அந்த பட்டியலில் மேலும் இரண்டு சுங்கச் சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் கூடுதலாக இரண்டு சுங்கச் சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பரனூரில் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளதாகவும், ஒரு மாதத்தில் 50 ஒற்றைப் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் 45 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளதாகவும், உள்ளூர் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆத்தூர் சுங்கச் சாவடியிலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதேநாளில் திரும்பும் பயணக் கட்டணம் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும், உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் 10 ரூபாய் வரையும், ஒரு மாதத்தில் 50 ஒற்றைப் பயணம் செய்வதற்கான மாதாந்திர கட்டணம் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.