Skip to main content

கீழே கிடந்த ரூ. 2 லட்சம்: எடுக்கவா? கொடுக்கவா? நெருக்கடியான நேரத்தில் வந்த சோதனை

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
nellai



நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவரான ஆயிரம், போலீஸ் ஆயுதப்படை மைதானம் எதிரே சாலையோரத்தில் கரும்புச்சாறு, இளநீர் மற்றும் கூழ் விற்பனை கடை நடத்தி வருகிறார். தனது வருமானத்தில் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி வரும் இவர், தனது மகனை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ கல்வி படிக்க வைத்துள்ளார். இதற்கான கல்வி கட்டணத்தை சிறிது சிறிதாக தவணை முறையில் பணம் செலுத்தி வருகிறார். ஓரிரு நாட்களில் ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். 
 

கல்வி கட்டணம் கட்டுவது குறித்து மனைவி வள்ளியுடன் பேசிவிட்டு கடந்த 4–ந் தேதி மாலையில் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் ஒருவர் வேகமாக சென்றார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு கைப்பிடியில் தொங்க விடப்பட்டிருந்த ஜவுளிக்கடை பை ஒன்று கீழே விழுந்தது. இதை மோட்டார் சைக்கிளில் சென்றவர் கவனிக்கவில்லை.
 

அந்த பையை எடுத்த வியாபாரி ஆயிரம், தனது கடையில் வைத்தார். வாடிக்கையாளர்கள் சென்றவுடன் அந்த பையை திறந்து பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், செல்போன் சார்ஜர், திருமண அழைப்பிதழ்கள் இருந்தன. மொத்தம் ரூ.2¼ லட்சம் இருந்தது. யாராவது வந்து கேட்டால் அந்த பையை தேடி வருவார்கள். அதில் பணம் இருந்தது காணாமல் போனது என்று பதறுவார்கள். அப்போது இந்த பையையும், பணத்தையும் கொடுத்து விடலாம் என்று தனது கடையில் காத்திருந்தார். ஆனால் யாரும் பணம் பற்றி கேட்க வரவில்லை.
 

மனைவிக்கு தகவலை சொல்லியிருக்கிறார். கடைக்கு வந்த வியாபாரியின் மனைவி, இதை அப்படியே கலெட்டர் ஆபிசில் கொடுக்கலாம். நாம செய்யும் இந்த புண்ணியம் நம்ம பையனுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என கூறியிருக்கிறார். 

 

மறுநாள் காலையில் வியாபாரி ஆயிரம், மனைவி வள்ளியுடன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள கலெக்டர் பங்களாவுக்கு சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலக ஊழியர்களிடம் கலெக்டரை பார்க்க வேண்டும். கீழே கிடந்த பையில் பணம் இருந்தது. அதனை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே கலெக்டரை சந்திக்க ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு கலெக்டர் ஷில்பாவிடம் பணத்தை ஒப்படைத்து நடந்த விவரங்களையும் கூறினர். கலெக்டர் ஷில்பா ஆயிரம்–வள்ளி தம்பதியை பாராட்டினார்.
 

இதையடுத்து கலெக்டர் ஷில்பா, உரியவர்களிடம் இந்த பணத்தை ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அந்த பையில் இருந்த திருமண பத்திரிக்கை விவரத்தை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், நெல்லையை அடுத்த பிராஞ்சேரி சித்தன்பச்சேரியை சேர்ந்த பெருமாள் என்பவர், தனது குடும்ப திருமண நிகழ்ச்சிக்காக சேர்த்து வைத்த பணம் என்பது தெரியவந்தது. போலீசார் பெருமாளை உடனடியாக அழைத்து வந்தனர். அவரிடம் பணம், திருமண அழைப்பிதழ், சார்ஜர் ஆகியவற்றை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
 

இதுதொடர்பாக ஆயிரம் கூறுகையில், எனது மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்த நெருக்கடியான நேரத்தில் கடவுள் எனக்கு பணத்தை கொடுத்து சோதித்து பார்த்துள்ளார். நான் அதை எடுக்கவா? சம்பந்தப்பட்டவருக்கு கொடுக்கவா? என்று குழப்பத்தில் இருந்தேன். நான் என்னுடைய மனைவியிடம் எல்லாவிதமான ஆலோசனைகளையும் கேட்பேன். அதேபோல் கேட்டபோது, என்னுடைய மனைவி உரியவரிடம் ஒப்படைத்து விடுங்கள், கண்டிப்பாக நமக்கு பின்னால் பணம் கிடைக்கும் என்றார்.

இதையடுத்து கலெக்டரிடம் பணத்தை ஒப்படைத்தேன். இதற்கு பரிசாக ரூ.10 ஆயிரம் கொடுத்தார்கள். அதை மனநிறைவோடு பெற்றுக் கொண்டேன். நான் எப்படி என் மகனை படிக்க வைக்க கஷ்டப்படுகிறேனோ, அதேபோலத்தான் அந்த திருமண வீட்டார் இந்த திருமணத்திற்கு பணத்தை ஈட்ட கஷ்டப்பட்டிருப்பார்கள். இப்போது அந்த குடும்பம் சந்தோஷப்பட்டிருக்கும். என்னை கலெக்டர் பாராட்டியது பெருமையாக இருக்கிறது. எனது குடும்பத்தினருக்கும் பெருமையாக இருக்கிறது என்றார் நெஞ்சை நிமிர்த்தியப்படி.

 

சார்ந்த செய்திகள்