கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு பணிகளை தொடங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது கீழ்பவானி வாய்க்கால். 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் இந்த கால்வாயானது மண் கால்வாயாகும். இந்த வாய்க்காலின் கசிவு நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டு நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. வாய்க்கால் அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் அதன் கரைகள் மற்றும் மதகுகள் சிதிலமடைந்துள்ளன. இதனால் வாய்க்காலை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாய்க்காலை புனரமைப்பு செய்யத் திட்டமிடப்பட்டது.
கடந்த 2021 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கீழ்பவானி வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கிய நிலையில் புனரமைப்பு திட்டத்திற்கு விவசாயிகளின் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். வாய்க்காலில் காங்கிரீட் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும், மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மற்றொரு தரப்பு விவசாயிகளோ வாய்க்காலின் கரைகள் பலமிழந்து அவ்வப்போது ஏற்படும் உடைப்பால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாய்க்கால் புனரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கீழ்பவானி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதுதொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்து இருதரப்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வாய்க்காலை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது.
வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கீழ்பவானி பாசன வாய்க்கால் புனரமைப்பு பணிகளை வரும் மே மாதம் முதல் தேதி முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆயக்கட்டு பாசன விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்க நிர்வாகிகள் பொன்னையன், பெரியசாமி ஆகியோர் நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர். மேலும், தீர்ப்புக்கு ஒத்துழைத்த தமிழ்நாடு முதல்வர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி வாய்க்கால் புனரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.