கரோனா காரணமாக இந்த ஆண்டும் பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைத்தது. அதேவேளையில் கரோனா தாக்கமும் அதிகரித்தது. அதனால், எழுத்து தேர்வுகள் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழு வழங்கிய பரிந்துரையின்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்விலிருந்து 50% மதிப்பெண், 11ம் வகுப்பு பொதுத் தேர்விலிருந்து 20% மதிப்பெண் மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்விலிருந்து 30% கணக்கீடு செய்யப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொளத்தூர் எவர்வின் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளவும், தேர்ச்சி பெற்றதை தங்களது ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது வெகு நாட்கள் கழித்து தங்கள் நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியிலும், தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலும் மாணவர்கள் துள்ளி குதித்தனர்.