சேலத்தில் நகைக்கடை நடத்தி 1.88 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை இந்திரா நகர் செல்வபுரத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், சேலம் சங்கர் நகரில் மகாலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார்.
இவருடைய மனைவி கந்தலட்சுமி, தம்பி மணிகண்டன், குருதர்மன், பால மணிகண்டன் (வயது 32) ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து நகைக்கடை நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர். நகை வியாபாரத்துடன் வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலீடுகளையும் பெற்று வந்தனர். அதன்படி, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கவர்ச்சியான விளம்பரம் செய்திருந்தனர்.
கவர்ச்சி விளம்பர வலையில் விழுந்த வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகளைக் கொட்டினர். ஆனால் உறுதியளித்தபடி யாருக்கும் வட்டியோ, முதலீட்டுத் தொகையோ திருப்பித் தரவில்லை. வாடிக்கையாளர்கள் நெருக்கடி கொடுத்ததை அடுத்து, கடந்த 2020- ஆம் ஆண்டு திடீரென்று அவர்கள் கடையை மூடிவிட்டு தலைமறைவாகினர்.
இதில் பாதிக்கப்பட்ட 11 பேர் சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். முதல்கட்ட விசாரணையில் 1.88 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கில் கந்தலட்சுமி, குருதர்மன், மணிகண்டன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ரவிக்குமார், பாலமணிகண்டன் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், அமானி கொண்டலாம்பட்டியில் பதுங்கி இருந்த பாலமணிகண்டனை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் கந்தசாமி, ஆய்வாளர் புஷ்பலதா தலைமையிலான தனிப்படையினர் வியாழக்கிழமை (செப். 22) கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.