எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் வைகை செல்வம் பேசுவையில், ''எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 70 வது பிறந்தநாள். தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் இரண்டு கோடி உடன்பிறப்புகளும் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த நாள் அதிமுகவின் திருநாள் பெருநாளாக இருக்கிறது. வர இருக்கின்ற நான்காம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் முடிவு இருக்கிறது. அந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அதிமுக பெரும் என்ற நம்பிக்கையோடு எங்கள் கட்சியின் உடன் பிறப்புகள் சாரை சாரையாக எடப்பாடி பழனிசாமியை பார்க்க வருகிறார்கள்.
எம்ஜிஆருக்கு பிறகு, ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை கட்டிக் காப்பாற்றுகின்ற தனிப்பெரும் தலைமை கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று. திமுகவின் அரசுக்கு எதிரான வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு விழுந்துள்ளது. மௌன புரட்சி ஏற்பட்டு அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருக்கிறது; குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நான்காம் தேதி வரைக்கும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை இருக்கிறது என்று சொல்கிறார்கள் ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் திமுக அரசு செய்யவில்லை. இந்த மின்வெட்டு கிராமப்புறங்களில் நான்கு மணி நேரம் நீடிக்கிறது. நகர்ப்புறங்களில் லோ வோல்டேஜ் வருகிறது. இதையெல்லாம் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். இப்படியே போனால் கடுமையான மின்வெட்டை சந்திக்க நேரிடும். ஒரு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரையே கொன்று எரித்திருக்கிறார்கள். ஆனால் அதைக் கூட இப்பொழுது வரை கண்டுபிடிக்க முடியவில்லை இந்த திமுக அரசால்'' என்றார்.