திருச்சி, மார்க்கெட் பகுதியில் உள்ள முருகன் டீ ஸ்டாலில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். அதில் சுமார் 10 கிலோ மதிப்பிலான தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு விற்பனை செய்த மொத்த விற்பனையாளர் திருவானைக்கோயிலை சேர்ந்த குமார் என்பவரின் கணபதி ஸ்டோரில் 2.8 கிலோ மற்றும் இராஜகோபுரம் அருகில் உள்ள இலட்சுமி பீடா ஸ்டாலில் சுமார் 7 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்து, பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் தில்லை நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இராமச்சந்திரன் என்ற நபரிடம் சுமார் 163 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரிடத்திலும் மொத்தம் சுமார் 182 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மூன்று கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் 9 எடுக்கப்பட்ட பின்பு 5 பேரையும், அவர்கள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களையும் அதிகாரிகள் தில்லைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும்” என்றார்.