மதுரையில் மூன்று ஆண்டுகளாகத் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கும்பலைப் பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து அதிக அளவிலான நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
அதன் பிறகு போலீசார் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் காவல்துறை அதிகாரி பேசுகையில், ''மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 180 சவரன் நகைகள் மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று வருடமாக வீடுகளின் கதவுகளை உடைத்து இரவு நேரங்களில் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை திருடியுள்ளனர். இந்த குற்றம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த வருடமும் திருட்டுகள் தொடர்பாக 12 வழக்குகள் வந்திருந்தது. இதற்காக தனிப்படை அமைத்து இந்த வழக்கிற்காகவே தனியாக ஸ்டடி பண்ணி கிடைத்த துப்புக்களை வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளோம். சின்னசாமி, கருப்பசாமி, சோனைசாமி, ஆசை பொண்ணு ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த 180 சவரன் தங்க நகை மற்றும் 9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 31 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. 2021ல் 7 வழக்கு, 2022ல் 5 வழக்கு, 2023ல் 12 வழக்கு முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெக்கவர் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.