
சேலம் அருகே காதலியின் பெற்றோரின் எச்சரிக்கையையும் மீறி அவர்களின் மகளை ரகசியமாக சந்தித்துப் பேசியதால் 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள பாரப்பட்டியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ்2 முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இவர் தனது உறவுக்காரர் ஒருவரின் மகளைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் சிறுவனை காதலித்தார். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தங்களது மகளைக் கண்டித்துள்ளனர். மேலும், லோகேஷையும் அழைத்துப் பேசிய அவர்கள், இனிமேல் தங்கள் மகளிடம் பழகக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், ஜூன் 28ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே லோகேஷ் தன் காதலியை வரவழைத்து ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார். இதை பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு பேர் பார்த்துவிட்டனர். உடனடியாக சிறுவனை மடக்கிப் பிடித்த அவர்கள், அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து பிளாஸ்டிக் குழாயாலும் கைகளாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் சிறுவனின் இடுப்பு, முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பல இடங்களில் ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த லோகேஷின் பெற்றோர், உறவினர்கள் நிகழ்விடம் விரைந்தனர். மகனின் நிலையைக் கண்டு பதறிய பெற்றோர், லோகேஷை மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிறுவன் லோகேஷ் மல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக பாரப்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ், நந்தேஸ்வரன், வாணவெடி என்கிற முருகேசன், மோகன் ஆகிய நான்கு பேர் மீது கையாலும், ஆயுதத்தாலும் தாக்கி காயம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே தலைமறைவாகிவிட்ட நான்கு பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பாரப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.