Skip to main content

தொடர் திருட்டு; 17 வயது சிறுவன் கைது

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
17-year-old boy arrested for serial theft of two-wheeler in Katpadi

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடு போவது குறித்து தொடர் புகார்கள் எழுந்ததன் அடிப்படையில், காட்பாடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனி அறிவுறுத்தலில் பேரில், காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில், காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் காவல்துறையினர் காட்பாடி குடியாத்தம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டதில், அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் திருடியது எனத் தெரியவந்தது. உடனே அந்த நபரை  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட தொடர் விசாரணையில், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறார் என்பதும் இவர் காட்பாடி, குடியாத்தம் சாலை, உழவர் சந்தை, வள்ளிமலை கூட்டு ரோடு, செங்குட்டை, காட்பாடி இரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது. 

கடந்த சில ஆண்டுகளாக சிறார்கள் பலர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இவர்களைக் கைது செய்து சிறார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் அங்கு திருத்தப்படாமல் வெளியே வருபவர்கள் மீண்டும் பெரிய குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் கொலைகளில் இந்த சிறார்கள் பங்கு அதிகமாக உள்ளது. கஞ்சாவுக்கும் மது போதைக்கும் இவர்களை அடிமைப்படுத்தும் பழைய ரவுடிகள் அதன் மூலம் தாங்கள் செய்ய நினைப்பதை இந்த சிறார்களை வைத்து செய்கின்றனர். இதனால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சார்ந்த செய்திகள்