Skip to main content

கண்டெய்னர் லாரியில் மது பாட்டில்கள் கடத்தல்; கையும் களவுமாகப் பிடித்த போலீஸ் 

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

15 lakh liquor bottles smuggled from Puducherry container lorry seized

 

புதுச்சேரியிலிருந்து கடலூர், பண்ருட்டி வழியாக சென்னைக்கு ஒரு கண்டெய்னர் லாரியில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக கடலூர் குற்றத்தடுப்பு நுண்ணறிவு போலீசார் மூலம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கடலூர் மஞ்சக்குப்பம் அருகே ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது மீன்களை ஏற்றி செல்லும் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றில் மீன்கள் எதுவும் இல்லை. சந்தேகமடைந்த போலீசார் அந்த பெட்டிகளை இறக்கி வைத்து உள்ளே பார்த்தபோது அந்த லாரியின் உள்ளே ஏராளமான மதுபாட்டில் பெட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரியையும் லாரியை ஒட்டி வந்தவர்களையும் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த லாரியில் வந்தவர்கள் புதுச்சேரி மாநிலம் தவளைக்குப்பத்தை சேர்ந்த பகலவன்(48) மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தேப் கத்தி மகன் கத்திரி(30) என்பதும், இவர்கள் புதுச்சேரியிலிருந்து கடலூர் வழியாக சென்னைக்கு மது பாட்டில்களை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. மதுபானங்கள் விற்கப்படும் ஒரு கடையில் இருக்கும் பெட்டிகளின் எண்ணிக்கை போன்று 280 பெட்டிகள் இருந்தது. லாரி மற்றும் மது பாட்டில்கள் மதிப்பு ரூபாய் 15 லட்சம் ஆகும். பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு செல்வதை விட புதுச்சேரியிலிருந்து கடலூர், பண்ருட்டி வழியாக சென்னைக்கு செல்வது அதிக கிலோமீட்டர் கொண்டதாகும். இருப்பினும் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு செல்லும்போது 2,3 சோதனைச் சாவடிகளை கடந்தாக வேண்டும். அப்போது போலீசாரிடம் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதற்காக கடலூர் வழியாக மதுபாட்டில்களை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட மதுபாட்டில் பெட்டிகளில் அதிக அளவில் பீர் பாட்டில்கள் இருந்தன. தற்போது கோடைக் காலம் தொடங்குவதால் மதுப்பிரியர்கள் அதிக அளவில் பீர் உபயோகப்படுத்துவார்கள் என்பதால் விலை உயர்ந்த பீர்பாட்டில்களையும், டின் பியர்களையும் கடத்தி வந்துள்ளனர்.

 

மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்ட லாரியின் உரிமையாளர் பகலவன். இந்த லாரி பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளது. தற்போது தான் அந்த வழக்குகள் முடிவடைந்து லாரியை பகலவன் ஓட்டியுள்ளார். தற்போது மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்ட லாரிக்கு தகுதிச் சான்று இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்