வங்கக்கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. நாளை தீவிரப் புயலாகவும் மாறி வடமேற்குத் திசையில் நகர்ந்து, தற்போதைய நிலவரப்படி, வரும் 25 -ஆம் தேதி பிற்பகல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும். இதனால், தமிழகத்தில் 26 -ஆம் தேதி வரை, மழை நீடிக்கும். அதேபோல் புயல் கரையைக் கடக்கும் பொழுது 100-லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 25-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளாகக் கண்டறியப்பட்ட 4,713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்குப் போதிய உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முன்கூட்டியே உணவுப் பொருட்களை வாங்க, ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நிவர்' புயல் கரையைக் கடக்கும் 3 மாவட்டங்களில் தேவையான 1.5 லட்சம் மின்கம்பங்கள், பணியாளர்கள், உபகரணங்கள் எல்லாம் தயாராக உள்ளது. எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த இடத்திற்குப் பணியாளர்களை அனுப்பி உடனடியாக மின்சாரம் கொடுப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். புயல் கரையைக் கடக்கும்பொழுது மட்டும் மின்சாரம் துண்டிக்கப்படும். புயல் கரையைக் கடந்த பிறகு பாதிப்புகளைப் பார்த்துச் சரி செய்தபின், மீண்டும் மின்சாரம் கொடுக்கப்படும் எனத் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.