வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், வாணியம்பாடி என இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
ஆம்பூர் மக்கள், வாணியம்பாடியில் அமைந்ததற்கு பதில் ஆம்பூரில் தான் வருவாய் கோட்டம் அமைந்திருக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. காரணம், அமைச்சர் நிலோபர் கபிலின் விருப்பத்தின் பெயரிலேயே வாணியம்பாடியில் வருவாய் கோட்டம் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.
இந்நிலையில் ஆம்பூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 9ந்தேதி போராட்டம் நடத்தினர். அதில், ஆம்பூரில் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும், ஆம்பூர் தாலுகாவில் இருந்து பிரிக்கப்பட்ட வருவாய் கிராமங்களை மீண்டும் இணைக்க வேண்டும், ஆம்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும், தொழிலாளர் நீதிமன்றத்தை ஆம்பூரில் அமைக்க வேண்டும், மாவட்ட கல்வி அலுவலகத்தை ஆம்பூரில் அமைக்க வேண்டும், ஆம்பூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவுமான நிலோபர் கபில், தனது தொகுதிக்கு தொழிலாளர் நல நீதிமன்றத்தை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரின் முடிவை மீறி ஆம்பூர்க்கு தொழிலாளர் நீதிமன்றம் வருமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.