ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. பாதுகாப்புப் பணிகள் குறித்து தமிழக தேர்தல் சிறப்பு டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா, தென் மண்டல ஐ.ஜி.யான சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒட்டப்பிடாரத்தில் நடந்தது. இடைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது பாதுகாப்புகளைப் பலப்படுத்துவது, சமூக விரோதிகளைக் கண்டறிந்து தடுப்பது, மற்றும் தேர்தலை சுமூகமாக நடத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அதிகாரகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
மாவட்ட காவல்நிலையப் பகுதிகளில் தேர்தலின் போது சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்க வாய்ப்புள்ளது என்ற காரணத்தினால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் காவல் துறையின் கண்காணிப்பிலும் உள்ளனர். தொகுதியில் உள்ள 257 வாக்குச் சாவடிகளில் மூன்று கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும 6 டி.எஸ்.பி. கம்பெனியும் உள்ளது. மொத்தம் 3500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். தேர்தலை சுமூகமாக நடத்த தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புகளில் ஈடுபடுவர் என்றார் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா.
இதனிடையே ஒட்டப்பிடாரத்தில் இருக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல், வரும் 12ம் தேதி காலை வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 வது பிரிவின் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். விழா தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.