திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.