திருமருகல் அருகே மயான கட்டடத்தின் மேற்கூறை இடிந்துவிழுந்ததில் சிறுவன் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
நாகை மாவட்டம், திருமருகலை அடுத்துள்ள கிராமம் திருகண்ணபுரம். அந்த ஊராட்சியில் உள்ள ராமநந்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு. அவரது மகன் சந்துரு. 14 வயதேயான அவர், வெள்ளிக்கிழமையன்று (10.12.2021) சக நன்பர்களோடு நாகமரத்தடி ஆற்றங்கரையோரம் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சந்துருவின் காலில் முள்குத்திவிட, முள்ளை எடுப்பதற்காக நிழல்தேடி அருகில் இருந்த மயான கட்டடத்தில் அமர்ந்து ஓடி ஆடி விளையாடியதால் உடம்பில் சுறந்திருந்த வியர்வையை போட்டிருந்த சட்டையால் துடைத்துக்கொண்டிருந்தார். அப்போது மயான கட்டடத்தின் மேற்கூறை மொத்தமும் திபுதிபுவென சரிந்து அவர் தலைமீது விழுந்தது. இடிபாட்டில் சந்துரு சிக்கியதைக் கண்டு சக நண்பர்களும் அருகில் ஆடு மேய்த்தவர்களும் அதிர்ச்சியடைந்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர், கூடியிருந்த பொதுமக்களின் உதவியோடு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இடிபாடுகளை அகற்றி சந்துருவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்துருவை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டான் என கூற, கூடியிருந்த எல்லோரும் சோகத்தில் அழுதுபுரண்டனர். உடற்கூராய்வுக்காக அங்கேயே அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
சந்துருவின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும், ஊர்க்காரர்களும் சந்துருவின் உடலை வாங்க மாட்டோம் என்றும், இதுவே யாராவது ஒருவர் இறந்து அங்கு தகனம் செய்ய வந்திருந்தால் எத்தனை உயிர் போயிருக்கும். தரமற்ற நிலையில் கட்டடத்தைக் கட்டியவர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை வேண்டும், இறந்த சிறுவனுக்கு உரிய இழப்பீடு வேண்டும்" என கூறி உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.