கோவை மாவட்டம், பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ளது 130 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில். இந்த கோவிலை ஒட்டி நால்வர் மடாலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் ஆண்டாண்டு காலமாக பராமரித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களின் பெரும் பங்களிப்புடன், இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சுப காரியங்கள் நடந்து வந்துள்ளன. குறிப்பாக, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் கல்யாணம், காதுகுத்து திருவிழா, சைவ சித்தாந்த வகுப்புகள், பெரிய புராணக் கதைகள், இலவச யோகா பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த யோசித்தால், இந்த கோவிலையே தேர்ந்தெடுப்பர். அந்த அளவுக்கு இந்த விநாயகர் கோவில் அப்பகுதி மக்களின் அடையாளமாக திகழ்ந்து வந்துள்ளது.
முன்னோர்களான பழனியப்பன், தர்மலிங்கம், அலமேலு அம்மாள், அங்கண்ணன், முருகேசன் ஆகியோரின் வழித் தோன்றல்களால் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இதை விரும்பாத மகாலிங்கபுரத்தை சேர்ந்த சஞ்சீவ்குமார் என்பவர், இந்த புகழ்பெற்ற விநாயகர் கோவிலை அபகரிக்கும் பொருட்டு காய் நகர்த்தி வந்துள்ளார். இதையடுத்து சஞ்சீவ்குமார், இது தனது தாத்தா சொத்து என உரிமை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜூன் 20 அன்று நள்ளிரவில் சஞ்சீவ்குமார் நாற்பதுக்கும் மேற்பட்ட குண்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்துடன் திருட்டுத்தனமாக விநாயகர் ஆலயத்திற்குள் நுழைந்துள்ளார். இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் பெரிதாக இல்லாமல் இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி அங்கிருந்த குண்டர்கள் விறுவென ஜேசிபி இயந்திரம் கொண்டு கோவிலின் சுற்றுச்சுவர் மற்றும் மணிமண்டபத்தை இடித்துள்ளனர்.
விடிந்ததும் கோவிலின் ஒருபகுதி இடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவத்திற்கு காரணமான சஞ்சீவ் மற்றும் அடியாட்கள் நாற்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மக்களின் கோவில் என அறியப்பட்ட 130 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.