12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2022 - 23 ஆம் கல்வியாண்டில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 3,324 மையங்களில் நடந்த இந்த பொதுத்தேர்வை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணியில் மொத்தம் 50,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தவுடன் மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்காகத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழை, இன்று (31.07.2023) முதல் மாணவர்கள் படித்த பள்ளிகளில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.