தலைவாசல் அருகே, இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு இருவரை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியில், நேற்று தலைவாசல் காவல்நிலைய காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்த இருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
வாகனத்தில் இருந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்ததில், அதில் லாரி டியூப்களில் 120 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், மணிவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (65), கள்ளக்குறிச்சி மாவட்டம் கூகையூரைச் சேர்ந்த சிவா (33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்தனர். வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் காய்ச்சப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து, அதிக போதை வருவதற்காக ஊமத்தங்காயை கலந்து விற்பனைக்குக் கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.