புதுக்கோட்டையில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் வீடு வீடாகச் சென்று சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் வசித்து வரும் 12 பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு சிறுவன் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், அந்த செய்தி வயலோகம் பகுதி கிராம மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
குடிநீர் தொட்டியின் சுகாதாரமின்மையால் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவ, ஊராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரை நிறுத்தி விட்டு வாகனத்தில் கொண்டுவரப்படும் தண்ணீர் டேங்க் மூலம் குடிநீர் சேவை வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வயலோகம் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.