Skip to main content

'11,516 பேருக்கு வேலை உறுதி; சீதாராமனின் செயல் வெட்கப்பட வேண்டியது'-முதல்வர் பேட்டி

Published on 14/09/2024 | Edited on 14/09/2024
'11,516 jobs guaranteed; Sitharaman's act should be ashamed'-Multalvar interview

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா சென்ற நிலையில் தினந்தோறும் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதற்கான அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. அதேபோல் அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள், தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.

முதல்வரின் இந்த அமெரிக்க பயணத்தில் மொத்தமாக தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது.  ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை புறப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரை அங்கிருந்த தொண்டர்கள் வழி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் 'Goodbye, USA!' (போய் வருகிறேன் அமெரிக்கா) என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார். அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட முதல்வர் துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய தமிழக முதல்வரை அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''17 நாட்கள் அமெரிக்க பயணத்தில் 7,618 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணமாகவும் அமெரிக்க பயணம் அமைந்துள்ளது.

உலகின் தலைசிறந்த 25 நிறுவனங்களைச் சந்தித்து 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை, சுற்றுச்சூழல் அமைப்பில் போட்டித் தன்மையை ஏற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் உலங்கெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு மேற்கொள்ள விரும்புகின்ற மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அப்பொழுது செய்தியாளர்கள் 'ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என இபிஎஸ் கேட்டுள்ளார்' என கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது வெளிநாடு சென்றதில் 10% கூட தொழில் தொடங்கவில்லை. முதலீடுகள் பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளேன். தொழில்துறை அமைச்சரும் விளக்கம் தந்துள்ளார். சொன்னதைதான் செய்வோம்; செய்வதைத்தான் தான் சொல்வோம். ஜிஎஸ்டி விவகாரத்தில் நிர்மலா சீதாராமனின் செயல் வெட்கப்பட வேண்டியது. ஜிஎஸ்டி குறித்து தொழிலதிபர் நியாயமான கோரிக்கை முன் வைத்தார்'' என்றார்.

மது ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு, ''திருமாவளவனே அதற்குரிய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். இது அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற மாநாடு அல்ல . இது பொதுவான விஷயம். இதற்கும் அரசியலுக்கும் முடிச்சு போடாதீர்கள் என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்