வாழப்பாடியில், மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, கடத்தி வந்த நபரையும் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல்நிலைய ஆய்வாளர் உமாசங்கர் தலைமையில் காவல்துறையினர், வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (அக். 7) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவருடைய மோட்டார் சைக்கிளில் இருந்த ஒரு மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் 110 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர், வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை புங்க மடுவைச் சேர்ந்த சந்திரன் (வயது 50) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் கடத்தி வந்த கள்ளச்சாராயம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி கொண்டு வரப்பட்டதா? அல்லது வெளிமாவட்டத்தில் இருந்து வாங்கி வரப்பட்டதா? இதன் பின்னணியில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.