ராஜபாளையத்தைச் சேர்ந்த போத்தி என்பவரது மகன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். 14 ஆம் தேதி காலையில் வழக்கம்போல் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றார். அன்று மாலை 4.40 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அவரிடம் தந்தை போத்தி “மாதாந்திர தேர்வு நல்லா எழுதினாயா?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் “நல்லா எழுதிருக்கேன் அப்பா..” என்று சொல்லிவிட்டு “மாலை 6 மணிக்கு ஸ்டடிக்கு செல்ல வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.
மகன் சொல்வதைக் கேட்டுவிட்டு, தனது மகளை அழைப்பதற்காக அவள் படிக்கின்ற பள்ளிக்கு போத்தி சென்றுவிட்டார். அப்போது மகன் படிக்கும் பள்ளியிலிருந்து போத்தியைத் தொடர்புகொண்ட ஆசிரியர், “உங்க மகன் ஸ்டடிக்கு வரவில்லை” என்று கூறியிருக்கிறார். ஆசிரியர் அப்படிச் சொன்னவுடன், அக்கம்பக்கத்தில் மகனைத் தேடினார். அப்போது மகனுடன் படிக்கும் சக மாணவர்கள் போத்தியிடம் “உங்க மகன் சரியா படிக்கலைன்னு அறிவியல் ஆசிரியர் கண்டித்தார்” என்று கூறியிருக்கின்றனர்.
இத்தகவலைக் கேட்டதும், தனக்குச் சொந்தமான இன்னொரு வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார் போத்தி. அங்கு சேலையைக் கழுத்தில் கட்டித் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் மகன். மகனைக் கீழே இறக்கி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்குள்ள மருத்துவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோகும்படி அறிவுறுத்தியுள்ளனர். இரவு 8 மணிக்கு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகனை போத்தி சேர்த்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாகச் சொல்லியிருக்கின்றனர்.
மகனைச் சவக்கிடங்கில் வைத்துவிட்டு, ராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் சென்ற போத்தி ‘மகனின் இறப்புக்குக் காரணமான பள்ளி ஆசிரியர் மாரிச்சாமியை விசாரித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ எனப் புகாரளிக்க, வழக்கு பதிவாகியுள்ளது.