தமிழ்நாட்டில் 2022-23 கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 9,14,320 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். அவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. மாணவர்கள் தங்கள் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in இணையதளங்களில் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 9,14,320 மாணவர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள் 4,04,904 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.66 சதவீதமும், மாணவர்கள் 88.16 சதவீதமும் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.5% பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் 89 பேரும், கணிதத்தில் 3,649 பேரும், அறிவியலில் 3,584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1,026 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளன.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தில் 95.55 சதவீத மாணவர்களும், ஆங்கிலத்தில் 98.93 சதவீத மாணவர்களும், கணிதத்தில் 95.54 சதவீத மாணவர்களும், அறிவியலில் 95.75 சதவீத மாணவர்களும், சமூக அறிவியலில் 95.83 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக 97.67% தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும், 97.53% தேர்ச்சி விகிதத்துடன் சிவகங்கை இரண்டாம் இடத்திலும், 96.22% தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் 87.45 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 97.38 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.38 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.25 சதவீதமும் தேர்ச்சி விகிதமாகப் பெற்றுள்ளன.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் மே 23 முதல் மே 27ம் தேதி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.