இன்று (02.07.2021) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கனமழை இருக்கும். அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். தமிழ்நாட்டில் ஜூலை மூன்றாம் தேதிவரை கனமழையும், 4 மற்றும் 5ஆம் தேதிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று 13 மாவட்டங்களில் (காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி) கனமழை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பொழிந்தது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின. விற்பதற்காக கொண்டுவந்த ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.