Skip to main content

அரசுப் பணிகளில் தமிழர்களுக்கே 100 சதவீதம் வாய்ப்பு வழங்க வேண்டும்! வேல்முருகன் எச்சரிக்கை!

Published on 13/12/2017 | Edited on 13/12/2017
அரசுப் பணிகளில் தமிழர்களுக்கே 100 சதவீதம் வாய்ப்பு வழங்க வேண்டும்! வேல்முருகன் எச்சரிக்கை!


 
தமிழக அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்கும் அரசு பணியாளர் தேர்வாணையத்தை கண்டித்து சென்னையிலுள்ள அதன் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியிருக்கிறது தமிழக வாழ்வுரிமைக்கட்சி. கட்சியின் தலைவர் பன்ருட்டி வேல்முருகன் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். 



தமிழக அரசு பணிகளிலுள்ள 100 சதவீத வாய்ப்புகளும் தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் வேல்முருகன். தமிழர்களுக்கு விரோதமாக செயல்படும் பணியாளர் தேர்வாணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த வேல்முருகன், ‘’ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஸ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே அரசு பணிகள் 100 சதவீதம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அந்த நிலை இல்லை. மோடியிடம் சரணடைந்திருக்கும் கையாலாகாத எடப்பாடி-பன்னீர் அரசு,  தமிழக அரசு வேலையில் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் சேர்வதற்கேற்ப தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்துள்ளது. 



அதன்படி அரசு வேலைகளில் தமிழர்களுக்கான முன்னுரிமை பறிக்கப்பட்டு வெளிமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாது. வெளிமாநிலத்தவர்களுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் உள்ள திருத்தப்பட்ட விதிகளை உடனடியாக மாற்றியமைப்பதுடன் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய துரோகங்களை எடப்பாடி அரசு நிறுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், எங்களின் போராட்டம் வேறு வகையில் வடிவம் பெறும்‘’என எச்சரித்தார்.  



எடப்பாடி – பன்னீர் அரசுக்கும் தேர்வாணையத்துக்கும் எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்த வேல்முருகன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரை கைது செய்து மாலையில் விடுவித்தது காவல்துறை.

- இளையர்
 

சார்ந்த செய்திகள்