தமிழ்நாட்டில் பல வருடங்களுக்கு தற்போது அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது டி.என்.பிஎஸ்.சி. இதற்காக 10 ம் வகுப்பு முதல் ஆய்வுப் படிப்பு வரை படித்த இளைஞர்கள் பயிற்சி மையங்களை தேடிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல வருடங்களாகவே படித்த இளைஞர்களால் கிராமங்களில் உருவாக்கப்பட்டுள்ள கட்டணமில்லா பயிற்சி மையங்களில் படித்த பலரும் இன்று அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள். இப்படி கறம்பக்குடி, வடகாடு, திருநாளூர் கிராமங்களில் பல பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராம இளைஞர்களே பயிற்சி மையங்களை தொடங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை வழியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டு நிகழ்ச்சியை ஊராட்சி சார்பில் ஊராட்சிமன்ற உறுப்பினர் முகமது மூசா ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த நிகழ்வில் இதுவரை போட்டித் தேர்வுகள் மூலம் அரசுப் பணிகளில் இருக்கும் திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா, மாவட்ட ஆட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் நூர் முகமது, தேவகோட்டை மாவட்டக் கல்வி அருவலக இளநிலை உதவியாளர் அசரப், அறந்தாங்கி ஊரக நல அலுவலர் சையது பகுருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தாங்கள் எப்படி படித்து அரசு வேலைக்கு சென்றோம் என்பதை விளக்கினார்கள்.
அதில் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் பேசும் போது.. " நீங்கள் குரூப் 2, 2ஏ, குரூப் 4, போன்ற எந்த போட்டித் தேர்வையும் 21 நாள் படித்தால் தேர்ச்சி பெறலாம் என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொல்கிறார். நாம் அவ்வளவு குறைவான நாள் வேண்டாம் 6 முதல் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களை படித்து குறிப்பு எடுத்துக் கொண்டால் போதும் 100 நாட்களில் அரசு ஊழியர் ஆகிவிடலாம். குறிப்பு எடுப்பதை நோட்டில் எழுதாமல் கனமான தாளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு வண்ணத்தில் நன்கு தெரிந்த குறிப்புகளை தவிர்த்துவிட்டு அரைகுறையாக தெரிந்த குறிப்புகள், முற்றிலும் தெரியாதவை என பிரித்து எழுதி வைத்துக் கொண்டால் அத்தனை புத்தகங்களையும் அடிக்கடி புரட்ட வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் சுமார் 10 மணி நேரம் அளவில் குறிப்புகளை படித்தாலே போதுமானது. நான் எந்த பயிற்சி மையத்திற்கும் செல்லவில்லை. துண்டுச்சீட்டு குறிப்புகளை படித்து நேரடியாக வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வானேன்" என்றார்.
கிராம நிர்வாக அலுவலர் ராஜா... " நீங்க எதையும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம், இஷ்டப்பட்டு படித்தால் வெற்றி நிச்சயம். 4 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். சென்னையில் பணி கிடைத்தது. ஆனால் சொந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதால் அத்தனை சலுகைகளுடன் கிடைத்த வேலைகளை வேண்டாம் என்று கிராம நிர்வாக அலுவலர் பணியை ஏற்றுக் கொண்டு தற்போது வடகாடு சுற்றுவட்டார கிராம இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். சில வருடங்களில் சுமார் 75 பேர் வேலைக்கு சென்றுள்ளனர். இப்போது 200 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். மேலும் குழுவாக சேர்ந்து படிப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்" என்றார்.
நூர்முகமது பேசும்போது... " வழக்கம் போல என்னையும் வெளிநாடு போகச் சொன்னார்கள். ஆனால் நான் அரசு வேலை என்ற கனவில் இருந்தேன். நான் வேலைக்காக படிக்கும் போது எனக்கு இது போன்ற எளிய வழிகளை யாரும் சொல்லித்தரவில்லை. அதனால் அத்தனை புத்தகங்களையும் திரும்ப திரும்ப படித்தேன். இது போன்ற எளிய வழிகளை காட்ட யாரேனும் இருந்திருந்தால் குரூப் 1 கூட தேர்ச்சி பெற்றிருப்பேன்" என்றார்.