100 நாள் வேலைக்கு வந்த பெண்களை தவறாக படம் பிடித்து ஆபாசமாக வீடியோக்களை சித்தரித்து செல்போனில் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதி மக்கள் திடீரென சென்னையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அங்கிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை திரும்ப பெறவில்லை. அதே நேரம் வீரசோழபுரம் பகுதியில் உள்ள முக்கிய அரசியல் புள்ளி ஒருவரின் வீடானது அடித்து நொறுக்கப்பட்டது. இப்படி வீரசோழபுரம் கிராமத்தில் அனைவருமே போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. போலீசாரின் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நள்ளிரவில் இந்த போராட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த நாள் காலை அதே பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டம் கூட்டமாகச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தனை போராட்டத்திற்கும் காரணம் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகனின் கொடூர செயல்தான். வீரசோழபுரம் மக்களின் பிரதான தொழில் விவசாயமும் கூலி வேலையும் தான். அதிலும் பெண்கள் அதிகம் பேர் 100 நாள் வேலைக்கு செல்லும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களின் போட்டோக்களை வசந்தகுமார் என்பவர் ஆபாசமாக சித்தரித்துள்ளார். திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனான இவர் 100 நாள் வேலை திட்டத்தின் பொறுப்பாளராக இருந்துள்ளார். அடிக்கடி பெண்கள் வேலை செய்யும் பகுதிக்குச் சென்று வேலைகள் சரியாக நடக்கிறதா என்பதை பார்வையிடுவது போல் பெண்களை வீடியோ எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து செல்போனில் பதுக்கி வைத்து அவ்வப்போது பார்த்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக இதே வேலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவருடைய கைபேசியை நண்பரான தினேஷ் குமார் என்பவரிடம் 2000 ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். தினேஷ் குமார் அந்த செல்போனை அன்லாக் செய்து பார்த்தபோது ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அவர் சமூக வலைதளங்களில் ஃபார்வேர்ட் செய்ய, ஊர் முழுக்க இந்த ஆபாச படங்கள் பரவியது. இதனால் ஒட்டுமொத்த கிராமமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தலைமறைவான வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் வாங்கப்பட்டதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.