வேலூர் மாவட்டம் கொனவட்டம் மதினா நகர் செல்லும் சாலையில் தாமரைக் குளம் தெரு பகுதியை சேர்ந்த ஆசிப் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய 10 வயது மகள் சாலையை கடக்க முயன்ற போது அதே பகுதியைச் சேர்ந்த முகர்ஃப் வேலூரில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக குழந்தையின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் குழந்தை வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு இடையே 10 வயது சிறுமியின் மீது இருசக்கர வாகனம் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்துல்கலாம் நகர், மதினா நகர் ஆகிய பகுதியில் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பலர் படுகாயம் அடைகின்றனர். இது போன்று அடிக்கடி குழந்தைகள் விபத்துகளில் சிக்கி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பகுதிக்கு சாலை அமைக்கும் பொழுது இந்த சாலையில் வேகமாக வாகனம் ஓட்டுகிறார்கள். அதனால் வேகத்தடை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் சாலை அமைத்ததாகவும் இதனால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.