இந்திய அரசின் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்ததின் படி இந்தியா முழுவதும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பத்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து வருகிறது. அதுபோல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் பத்து ரூபாய் நாணயம் மக்களிடமும், கடைக்காரர்களிடமும் புழக்கத்தில் இருப்பதை பார்க்க முடியவில்லை. அதுபோல் பத்து ரூபாய் நாணயத்தை மக்களும் வாங்குவதில்லை. கடைக்காரர்களிடம் கொடுத்தாலும் கூட வாங்க மறுக்கிறார்கள். அந்த அளவிற்கு தடைசெய்யப்பட்ட நாணயமாக இருந்து வருகிறது.
பத்து ரூபாய் நாணயத்தை பொதுமக்கள் கொடுத்தால் நாங்கள் வாங்க ரெடியாக இருக்கிறோம். அதவே நாங்க மற்ற வியாபாரம் மூலம் திரும்ப மக்களிடம் கொடுக்கும் போது பத்து ரூபாய் நாணயத்தை யாரும் வாங்க மாட்டேங்கிறாங்க. இந்த காசு செல்லாது, அதனால நோட்டாக கொடுத்திருங்கள் என கேட்கிறார்கள்.
அதுபோல் மொத்த வியாபாரிகளிடம் சரக்கு வாங்க சென்றாலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. கேட்கப்போனால் நாங்க பேங்கில் கொண்டுபோய் ஆயிரம், ஐநூறு கொடுத்தாலும் அவர்களும் வாங்குவதில்லை. அப்படியிருக்கும் போது உங்களிடம் எப்படி வாங்க முடியும் என வியாபாரிகளும் தட்டிக்கழித்து விடுகிறார்கள். அதனால் தான் நாங்களும் பொதுமக்களிடம் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இந்த நாணயம் புதிதாக வந்தபோது ஆர்வத்தில் நானும் ஆயிரம் ரூபாய் வரை பத்து ரூபாய் நாணயத்தை வியாபாரம் மூலம் மக்களிடம் வாங்கினேன். அதை திரும்ப கொடுக்கும் போது மற்ற மக்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர். அதவே இப்ப வரை செல்ல வைக்க முடியாமல் கடையில் பொட்டளம் கட்டி போட்டிருக்கேன். இதுபோல் பல சிறு வியாபாரிகளும் பத்து ரூபாய் காசுகளை பொட்டனம் போட்டுதான் போட்டிருக்கிறார்களே தவிர, செல்ல வைக்க முடியவில்லை என்றார் திண்டுக்கல்லை சேர்ந்த பெட்டிக்கடை உரிமையாளர் செல்வம்.
இது சம்மந்தமாக சமூக ஆர்வலரான தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது… திண்டுக்கல் மாவட்டத்தைத் தவிர பக்கத்து மாவட்டமான மதுரை, தேனி, திருச்சியிலெல்லாம் பத்து ரூபாய் நாணயத்தை கடைக்காரர்கள் வாங்குகிறார்கள். ஆனால் இங்கு மட்டும்தான் சிறு வியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை வாங்க மறுக்கிறார்கள். அதுபோல் பால் வியாபாரிகள் முதல் காய்கறி வியாபாரிகள் வரை பத்து ரூபாய் நாணயத்தை நீட்டினாலே இந்த காசு செல்லாது. அதற்கு பதிலாக பத்து ரூபாய் நோட்டை கொடுங்கள். இல்லையென்றால் பொருட்களை வைத்துவிட்டு போங்கள் என கூறிவிடுகிறார்கள். அதைவிட கொடுமை என்னவென்றால், பிச்சைக்காரர்கள் கூட பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். அந்த அளவிற்கு மத்திய ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பத்து ரூபாய் நாணயம் செல்லாத நாணயமாக இருந்து வருகிறது.
அதுபோல் ஐந்து ரூபாய் நோட்டைக்கூட பெட்டிக்கடைகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை வாங்குவதில்லை. கேட்கப்போனால் இது செல்லாது என அவர்களே ஒரு முடிவு எடுத்துக்கொண்டு ஐந்து ரூபாய் நோட்டை வாங்குவதில்லை. இதையெல்லாம் மாவட்ட நிர்வாகமும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. இனிமேலாவது இந்த பத்து ரூபாய் நாணயம் புழகத்தில் வருவதற்கும், ஐந்து ரூபாய் நோட்டுளை கடைக்காரர்கள் வாங்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமியிடம் கேட்ட போது… பத்து ரூபாய் நாணயம் எல்லா மாவட்டத்திலேயும் புழகத்தில் இருந்து வருகிறதே. இங்கு மட்டும் புழக்கத்தில் இல்லை என்ற விசயமே நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியுது. உடனடியாக லீடு பேங்க் மேனஜரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.
அதை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே நம் செல்போனை தொடர்புகொண்ட லீடு பேங்க் மேனேஜர் மாரிமுத்துவோ… கலெக்டர் மேடத்திடம் நீங்கள் பேசியதாக கூறினார். நீங்கள் சொன்னது போல் இங்கு மட்டும்தான் பத்து ரூபாய் நாணயம் புழங்கவில்லை. அதனால உடனடியாக பத்திரிகையாளர்களுக்கு பிரஸ் நியூஸ் கொடுத்து, மற்ற மாவட்டம் போல் நம்ம மாவட்டத்திலும் பத்து ரூபாய் நாணயம் புழகத்தில் வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். ஆக கூடிய விரைவில் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமியின் அதிரடி நடவடிக்கையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயம் மக்கள் மத்தியில் மீண்டும் புழக்கத்தில் வர இருக்கிறது.