சேலம் வழியாக கேரளா சென்ற ரயிலில் கஞ்சா கடத்தியதாக ஒடிசா இளைஞர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதைத் தடுக்க சேலம் ரயில்வே காவல்துறை சிறப்பு எஸ்.ஐ பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏப். 27ம் தேதி, தன்பாத் & ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஏறி, சேலம் ரயில்நிலைய சந்திப்பு வரை தனிப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். பின்பக்க பொதுப்பெட்டியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் கொண்டு வந்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாதல் பெகேரா (22) என்பது தெரிய வந்தது. ஒடிசா மாநிலம் பலாங்கீரில் இருந்து கஞ்சா வாங்கி, ரயில் மூலம் ஈரோடுக்கு சென்று, பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் பழனிக்குச் சென்று சில்லறையில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது. அதே ரயில் பெட்டியில் இருந்த சேலம் மாவட்டம் சின்ன கல்வராயன் மலை கீரைக்கடையைச் சேர்ந்த சடையன் (51) என்பவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதையும் பறிமுதல் செய்தனர்.
இவர் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கஞ்சாவை வாங்கி சேலத்தில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்துள்ளார். இதையடுத்து பாதல் பெகேரா, சடையன் ஆகிய இருவரையும் ரயில்வே தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களையும் அவர்களிடம் பறிமுதல் செய்த 10 கிலோ கஞ்சாவையும் ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தீவிர விசாரணை நடத்தினார். பின்னர் இருவரையும் சேலம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் இருவர் மீதும் கஞ்சா கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.