பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12- ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார். பின்னர், விருதுநகர் மற்றும் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, நீலகிரி, திருவள்ளூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், அரியலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், நாமக்கல் மற்றும் திருப்பூரில் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை காணொளி மூலம் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (31/12/2021) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி, தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி மாதம் 12- ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்துவதற்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 10,008 பொங்கல் பானைகள் வைத்து 'மோடி பொங்கல்' என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 100 நாதஸ்வர கலைஞர்கள், 50 ஜல்லிக்கட்டு காளைகள் பிரதமரை வரவேற்க இருப்பதாகவும் தமிழக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக பாஜகவினர் இடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.