முத்துராஜுவுக்கு சொந்த ஊர் சிவகாசியை அடுத்துள்ள கே.மடத்துப்பட்டி. புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்ததோ ஓசூர் பார்டரில். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவைதான், மனைவி தனலட்சுமி மற்றும் மகன் அரவிந்தைப் பார்ப்பதற்கு சொந்த கிராமத்தில் தலை காட்டுவார். வீட்டுக்குள் ‘என்ட்ரி’ ஆகும்போதே நிதானம் தவறிய தள்ளாட்டம்தான். சந்தேகப் பேய் தொற்றிக்கொள்ள, குடி போதையில் தனலட்சுமியிடம் “நான் ஊர்ல இல்லாதப்ப நீ என்னென்ன பண்ணுறன்னு எனக்குத் தெரியும்..” என்று கண்டபடி பேசுவார்; அடிப்பார். வீட்டுப் பிரச்சனை வெம்பக்கோட்டை காவல் நிலையம் வரை போகும். ‘இனி பிரச்சனை பண்ண மாட்டேன்..’ என்று எழுதி வாங்கும் காக்கிகள், புத்திமதி கூறி முத்துராஜுவை அனுப்பி வைப்பார்கள். இதெல்லாம் வாடிக்கையாக நடப்பதுதான்!
வழக்கம்போலவே, கடந்த 22-ஆம் தேதியும் வீட்டில் ரகளை செய்துவிட்டு, பேச்சு மூச்சற்று கிடந்தார் முத்துராஜ். கம்பால் அடிபட்டதால் மார்பு, முதுகுப் பகுதிகளில் வரிவரியாகக் காயங்கள். தலையிலும் பலத்த அடி. வலது காது கிழிந்து தொங்கியது. முத்துராஜுவின் உடலில் உயிர் இல்லாததை அக்கம் பக்கத்தினர் வந்துதான் உறுதி செய்தார்கள்.
போலீஸ் மோப்ப நாய் ராக்கியின் தேடலில் பிடிபட்டது தனலட்சுமிதான். அவர் அளித்த வாக்குமூலத்தில் “எந்த நேரமும் குடிதான். அன்னைக்கு ராத்திரி முழுக்க சண்டைதான். வீட்ல நாங்கள்லாம் விரதம் இருக்கோம். அவரு, புரோட்டாவும் சிக்கனும் வாங்கிட்டு வந்து மாலை போட்டிருந்த என் பையனை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தினாரு. என் தம்பி சஞ்சீவிகிட்ட, ‘நான் வெளியூர் போனதும் உன் அக்காவ வச்சி நீ சம்பாதிக்கிற..’ என்று கேவலமாகப் பேசினார். அவரு பேசினதக் கேட்டு ஆத்திரம் வந்திருச்சு. நானும் என் தம்பியும் அவரைக் கம்பால அடிச்சோம். செத்துட்டாரு.” என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
குடியும் சந்தேகமும், மனைவி தனலட்சுமியின் கையாலேயே முத்துராஜுவின் உயிரைப் பறித்துவிட்டது. தனலட்சுமியும் அவரது தம்பி சஞ்சீவியும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
‘மது – நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு’ என்ற சத்திய வாசகத்தை முத்துராஜ் போன்ற போதை ஆசாமிகள் ஏனோ உணருவதே இல்லை!