கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், மண்டல தபால் நிலையம், தமிழகத்தின் மையமாக கொண்டு புகைவண்டி சந்திப்பு நிலையம், அதேபோன்று கல்வித்துறை, பத்திரப்பதிவு துறை, மின்சாரத் துறை, ஊரக வளர்ச்சி துறை, வணிகவரித் துறை போன்ற பல்வேறு துறைகளில் உயர் நிலை அலுவலகங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் உள்ளன. தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக விருத்தாசலம் மாவட்டம் துவக்க ஏதுவாக தற்போது விருத்தாசலம் கோட்டத்தில் சார் ஆட்சியர் அலுவலகமும், விருத்தாசலம் காவல் துணை மாவட்டத்தில் உதவி கண்காணிப்பாளரும் பதவி வகித்து வருகிறார்கள். இவ்வளவு வசதி வாய்ப்புள்ள விருத்தாசலம் வட்டம் மற்றும் திட்டக்குடி வட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட இந்த பகுதி புதிய மாவட்டமாக மாற்றுவதற்கு தகுதியானதாகும். எனவே புதிய மாவட்டம் அமைக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் வகையில் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முன்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வேலு தொடங்கி வைத்தார். கார்மாங்குடி வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க தனவேல், கே.கந்தசாமி, ச.சத்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க, செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். பார்த்தசாரதி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவிகள், மாணவர்கள் பொதுமக்கள், வணிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு பட்ட அமைப்பினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலம் ஒரு லட்சம் கையெழுத்து பெற்று முதலமைச்சரிடம் ஒப்படைக்க விழிப்புணர்வு இயக்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
மேலும் இதே கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும் விதமாக இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் மங்களூர், நல்லூர், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 250 ஊராட்சிகளிலும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும், விவசாயிகளும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விருத்தாசலம் மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.