கடும் போக்குவரத்து நெரிசல் நேரத்திலேயே லாரிகள், தண்ணீர் லாரிகள் வரும் வேகம் மிரள வைக்கும். இப்போது ஊரடங்கு காலம். சாலையில் போக்குவரத்து குறைவாக இருப்பதால் அந்த லாரிகளுக்கு சொல்லவா வேண்டும். ஊரடங்கு நேரத்தில் பணிக்கு சென்ற பெண் போலீஸ் ஒருவர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயுதப்படையை சேர்ந்த மகளிர் போலீஸ் பவித்ரா. இவர் செவ்வாய்க்கிழமை நந்தனத்தில் பணிபுரிவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரதி சாலையில் இருந்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் பாரிஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி இவர் வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பவித்ரா எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரத்தினுள் சிக்கிக்கொண்டார். சம்பவ இடத்திலேயே பெண் போலீஸ் பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துணை ஆணையர் (கிழக்கு) பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.