மத்திய பாஜக மோடி அரசு உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்டபூர்வமான உரிமைகளை மெல்ல மெல்ல பறித்து வருகிறது. அப்படித்தான் கட்டுமான தொழிலாளர்களுக்ககான முந்தைய சட்ட நடைமுறைகளை துண்டாடியுள்ளது.
தொழிலாளர் நலச்சட்டங்கள் மொத்தம் 44 ஐ வெறும் நான்கு தொகுப்புகளாக்கியுள்ளது. அதேபோல் கட்டுமானத் தொழிலாளர்கள் மத்திய சட்டத்தையும், அதன் நலவாரியங்களையும் அழித்தொழிக்கும் வழிமுறையிலும் பாஜக அரசு இறங்கியுள்ளது. இதை எதிர்த்தும் மத்திய பிஜேபி, மோடி அரசைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் தமிழகம் முழுக்க மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் நேற்று (24-9-2019) காலை 10.00 மணி முதல் பகல் 4 வரை ஈரோடு, தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவரும், மாநிலச் செயலாளருமான தோழர் எஸ்.சின்னசாமி தலைமையில் தர்ணாப் போராட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டப் பொதுச்செயலாளர் ஜி.வெங்கடாஜலம் போராட்டத்தை நிறைவு செய்தார்.
இந்த தர்ணா போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கோஷமிட்டனர்.