திமுக இளைஞரணி செயலாளரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இன்று காலை முதல் உதயநிதி ஸ்டாலினுக்கு திரைத்துறையிலிருந்தும் அரசியல் வட்டாரங்களிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தந்தை பெரியாரின் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “இளைஞர் அணி செயலாளராக மீண்டும் ஒரு முறை தேர்வு செய்துள்ளனர். ஏற்கனவே பாசறை கூட்டங்கள் 234 தொகுதிகளிலும் நடத்தி முடித்துள்ளோம். முதல்வர் ஒன்றிய அளவில் கிளை அளவில் பாசறை கூட்டங்கள் நடத்த சொல்லியுள்ளார். அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். பிறந்தநாளுக்கு அனைவரும் வாழ்த்து சொல்லியுள்ளனர். நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கியுள்ளனர். அனைவருக்கும் நன்றி” எனக் கூறினார்.
இதன் பின், அமைச்சராகப் போகிறார் உதயநிதி என்று செய்திகள் பரவுகிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “ஒன்றரை வருடமாக இதைச் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். முதல்வர் முடிவெடுப்பார்” எனக் கூறினார்.