கோவை மாவட்ட தமாகா சார்பில் மூப்பனார் பிறந்தாள் விழா விவசாயிகள் தின பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் தமாகா மாநில தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசியபோது, ‘’ தமிழக மேற்கு மண்டல விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பாண்டியாறு, புன்னம்புழா திட்டம், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் சென்று சேரவில்லை. காரணம் குடி மராமத்து பணிகள் சரிவர நடைபெறவில்லை. ஏரி கால்வாய்கள் தூர் வாரப்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதால் கால்வாய்கள், ஏரிகள்,புதர்மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரியின் நீர் கடைக்கோடிக்கு இன்னும் சென்றடையவில்லை.
மேட்டூர் அணைக்கு கீழே காவிரியின் குறுக்கே தேவையான அளவு தடுப்பணைகள் கட்ட வேண்டும். மேலும் எல்.பி.பி. பாசன வாய்க்கால்களை ஆழப்படுத்த வேண்டும். இதை செய்தால் தான் மழை காலங்களில் உபரி நீரை பாசனத்திற்கு கூடுதலாக பயன்படுத்த முடியும். விவசாயத்தையும் விவசாயிகளையும் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.