அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதலே மக்கள் மெரினாவில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் கூடி நினைவஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், சசிகலா எம்ஜிஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் சொல்ல விரும்புவது எல்லாம் அதிமுக தலைவர்களுக்கு பிறந்தநாள் நினைவஞ்சலி செலுத்துகிறோம். எம்ஜிஆர் ஆரம்பித்த இந்த இயக்கத்தை, அவருடைய மன்றங்களைச் சேர்ந்தவர்களும் ஏழை மக்களும் அணைத்துப் பிடித்தார்கள். திமுகவை விட அதிக ஆண்டுகள் ஆண்டது அதிமுக. அதன் வழியாகத்தான் பல திட்டங்கள் நடந்தது.
அதுமட்டுமல்ல, பெரியாரின் நினைவு தினமும் இன்றைக்குத்தான். சமுதாயத்தில் சமநிலையும் பெண்களுக்கு சம உரிமையும் வேண்டும் எனச் சொன்னார் அவர். அது எல்லாவற்றையும் எங்களது தலைவர்கள் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இன்றைக்குக் காலத்தின் கட்டாயம், அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால்தான் ஏழை மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமென்று.
அதற்காகத்தான் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திமுகவிற்கு எந்த விதத்திலும் இடம் கொடுத்து விடக்கூடாது என்று சொல்கிறேன். அந்தப் பார்வையில்தான் என் பயணம் இருக்கிறது. நிச்சயம் அதில் வெற்றி பெறுவேன். ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது” எனக் கூறினார்.